தோழமை..


எதற்கும் விலை சொல்லும்
வியாபார உலகத்தில்..
அன்பிற்கு அன்பை விற்கும்
வினோத பந்தம்..

ஆபத்து


நெருங்கிய நண்பன்
விலகி சென்றாலும்..
விலகியிருந்த எதிரி
நெருங்கி வந்தாலும்..
ஆபத்து தான்..

சிரி சிரி சிரி...


சிரிக்க காரணம்
கொடுயென்றேன்
இறைவனிடம்..

சோதனையில்
சிரியென்றார்
சிரித்துக்கொண்டே..

இப்போதெல்லாம்
மூச்சு திணற சிரிக்கிறேன்
ஒவ்வொரு வினாடியும்..

இனியது..


முன்பின் தெரியாத
குழந்தையின் சிரிப்பு..
விடியற்காலை தென்றலின்
சில்லென்ற ஸ்பரிசம்..
ஏழைக்கிழவி ஒருத்தியின்
மனமார்ந்த வாழ்த்து..
முன் நெத்தியில் அம்மாவின்
அன்பான முத்தம்..
வாங்க நினைத்த பொருளை
பரிசாக தந்த தோழியின் நேசம்..
இனியதுண்டோ
இதைவிடவும்??

முறிவு


என்றோ முடிந்து போயிற்று..
நம் உண்மை நேசம்..
நம்பு..
அது என்றோ முடிந்து போயிற்று..
நீ செய்த கசப்பான
செயல்களும் இனித்தது அன்று..
உன் உண்மை அன்பையும்
அருவருக்கிறேன் இன்று..
நீ ஒன்றும் அச்சாணி இல்லை..
நீ முறிந்து போனால்
என் வாழ்க்கை வண்டி கவிழ..
மனதில் கொள்..
தண்டிக்கப்படாத குற்றங்கள்
மன்னிக்கப்படாததும் தான்..

பேச்சு..


எதிர் வீட்டில் நடந்த
அடிதடி சண்டையையும்..
பக்கத்து வீட்டு பெண்
ஓடி போனதையும்..
சக ஊழியரின்
திடீர் முன்னேற்றத்தையும்..
சுவாரசியமாய் பேசுகிறது உலகம்..

பிழையோ?


குருடர்கள்
நிறங்களை பற்றி
விவாதிப்பதில்லை..
செவிடர்கள்
இனியகுரல் தேடி
ஓடுவதில்லை..
ஊமைகள்
மொழி மோகம்
கொள்ளவதில்லை..
ஒருவேளை..
நம்மை குறை இன்றி படைத்தது
இறைவனின் பிழையோ?

பொம்மை கல்யாணம்


கொட்டாங்குச்சி மேளம் கொட்டி..
வாழை நாறு தாலி கட்டி..
செம்மண் கரைச்சு பொட்டு வைச்சு..
மாவிலையில் பந்தி போட்டு..
அமோகமாய் நடக்குது
பொம்மை கல்யாணம்..

கோலம்


உன் பார்வையில்
என்னை கல்லாக்கி..
உன் புன்னகையில்
நொறுக்கி பொடியாக்கி..
வீதியில் மாக்கோலம் போடாதே..

கவனம் பெண்ணே..


யாரையும்
ராமன் என்று நினைக்காதே..
கலியுக ராமர்கள்
சூர்ப்பனகைளையும்
விட்டு வைப்பதில்லை..