மண்வாசம் எங்கே போச்சு?


புழுதி சாலைகளும்..
சடுகுடு ஆட்டங்களும்..
பச்சை வயல்களும்..
பசுவின் மணியோசையும்..

குளக்கரை குளியலும்..
கூட்டஞ்சோறு கும்மாளமும்..
அரசமர பிள்ளையாரும்..
திண்ணை வீடுகளும்..

அடர்ந்த தோப்புகளும்..
அடுத்த வீட்டு சொந்தங்களும்..
சாணம் தெளித்த வாசல்களும்..
கிணற்றடி விவாதங்களும்..

எங்குதான் தொலைந்தது போயின
இந்த அவசர யுகத்தில்..

காற்றை தவிர இங்கே
எல்லாவற்றிற்கும் விலையுண்டு..

கழனிகள் வீடுகளாகின
பறவைகள் யோசித்தன
எப்படி உணவு கிடைக்கும்
இந்த மனிதர்களுக்குகென்று..

விந்தை


சோகத்தில் அழுகை..
மகிழ்ச்சியில் புன்னகை..
இவையே அதீதமானால்?
விரக்தி சிரிப்பு..
ஆனந்த கண்ணீர்..

கற்பனை உலகில்..


முடியாததேதும் இல்லை
கிடைக்காத பொருட்கள் இல்லை
வெறுக்கின்ற உள்ளம் இல்லை
பொய் முக மனிதர் இல்லை..

கரைந்து போன நிமிடங்களுக்கு
கடத்தி போன தருணங்களுக்கு
மறுபிறவி கொடுக்கும் கடவுள்
கற்பனை..

இருந்தாலும்..
இது தீர்வு அல்ல..
இது தொடர்ந்தால்...
இது தொடர்ந்தால்...

இப்படியே உறங்கி போவேன்..
விடியல் மறந்து போகும் என் இரவு..
இது முடிவு இல்லை
இது மயக்கம்..

விழித்து கொண்டேன்..
கடந்து போன நிமிடங்கள் நினைத்து..
கடக்க வேண்டிய காலம்
வீணடிதேனோ..

விழித்து கொண்டேன்..
இது தீர்வு அல்ல..
இது தொடர்ந்தால்..
இப்படியே உறங்கி போவேன்..

கற்பனை சிறை உடைக்க
வலிய நெஞ்சம் வேண்டும்..
நிஜத்தை பிரித்துணர
நீடிய சாந்தம் வேண்டும்..

விழித்து கொண்டேன்..
இனி கற்பனை உலகம் வேண்டாம்..
இது உறக்கம் இல்லை
ஒருவகை மரணம்..

மறியல்


கோரிக்கை இன்றி
சாலை மறியல்..!!
பேரூந்தின் முன்
எருமைமாடு...

விருப்பம்


யாராவது
யாரோடாவது
பேசத்தான்
விரும்புகிறார்கள்..

மௌனமாய்
இருக்க
யாரும்
விரும்புவதில்லை..

அடுத்து பார்க்கும்
போது..
உதவி கேட்பார்களோ..
பக்குவமாய் பேசி..
சொத்து கேட்பார்களோ..

என்ற
சங்கடத்தோடு..
சாலைகளில்
சந்திக்கையில்
மௌனமாய்...

ஒரு
புன்னகையோடு
புதைக்கிறார்கள்
மனிதநேயத்தை..

இருந்தாலும்
யாராவது
யாரோடாவது
பேசத்தான்
விரும்புகிறார்கள்..

நிதர்சனம்


உன்னை விட அதிகமாய்
எதையும் நேசிக்காதே..
ஏதும் தன்னை விட
அதிகமாய் உன்னை
நேசிக்காது..

வாழ்க்கை வாழ்வதற்கே..


பிறந்து விட்டதற்காய்
வாழ்க்கை இல்லை...
வாழ்வதற்கே
பிறந்திருக்கிறோம்..
பாதைகேற்ற பயணம்
வேண்டாம்..
பயணதிற்கேற்ற
பாதை செய்வோம்..

விழிப்பு


உலகத்தை அறிந்து கொள்பவன்
கனவு காண்கிறான்..
தன்னை அறிந்து கொள்பவன்
விழித்து கொள்கிறான்..

இயற்கை


நிலத்தாயின் மடியில்
மழை தந்தையின்
வாரிசுகள்..
கடவுள் கைப்பட
எழுதிய
பசுமையான கவிதை..

ஈரம்

மண்ணீர் வற்றி,
கண்ணீர் குடிக்கையில் தான்,
நீரின் அருமை புரியும்..
செந்நீர் வற்றி
தேகம் கொதிக்கையில் தான்..
நீரின் அருமை புரியும்..

வரதட்சணை


கல்யாண சந்தையில்
ஓர் ஆறறிவு ஜீவனின்
உயிர் பேரம்..

ஏழைகள்


வாழ்க்கை என்னும் பூந்தோட்டத்தில்
இதழ் ஒடிந்த பூக்கள்..
முகவரி தொலைத்த பறவைகள்..
வாழ்க்கை என்னும் வேக குதிரையின்
கடிவாளம் தவறவிட்ட ஜீவன்கள்..
இவர்கள் பாதையில் கற்கள்..
சிரசில் வறுமை என்னும் முள் கிரீடம்..
இவர்கள் முதுகில்
யானைகளை ஏற்றி விளையாடின
ஆதிக்க குரங்குகள்..
நிகழ் காலத்துடன் போராடும்
தோல் போர்த்திய எலும்பு கூடுகள்..
மரணத்திற்கு காத்திருக்கும்
செல்லா காசுகள்,
பார்க்கலாம் காலனுக்காவது
கருணை இருக்கிறதா என்று...

திரும்புமா?

படிக்காமல் வகுப்பறை நுழைய பயந்து..
கலை நிகழ்ச்சிகளில் கும்மியடித்து..
அழகு ஒப்பனை செய்கிறேன் என்ற
பெயரில் அலங்கோலபடுத்தி..
செல்ல பெயர் சூட்டி
நிஜ பெயர் மறந்து..
கல்லூரி வளாகம் எங்கும்
காலடி பதித்து..
வாழ்க்கை என்பதன் நோக்கம்
அறியாது குதூகலித்து..
கள்ளம் இல்லா புன்னகையோடு..
கை கோர்த்து திரிந்த காலம் திரும்புமா???

அன்பு


அன்பாயிருங்கள்..
அன்பை பொறுத்தவரை,
பெறுவதை காட்டிலும்..
கொடுப்பதே இன்பம்..
அன்பாயிருங்கள்..
கோபம் சாதிக்காததை..
அன்பு சாதிக்கும்..
அன்பாயிருங்கள்..
போர்களம் ஜெயிக்காததை..
புன்னகை ஜெயிக்கும்..
அன்பாயிருங்கள்..
மனிதம் இனிக்கும்..
அன்பாயிருங்கள்..

இப்படியும் யோசிக்கலாம்..


முதுகுக்கு பின்னால்
முனுமுனுக்கும் கூட்டம்..
புன்னகைத்து கொண்டேன்..
அவர்களுக்கு ஒரு அடி
முன்பு நான் இருப்பதால்தானே..

நட்பு


வம்பு சண்டை போட்டு
வாய் வலிக்க வாதாட வைத்து..
கம்பு சண்டை போட்டு
கை கிழித்து இரத்தம் பார்த்து..

அலட்டலாய் பேசி கோபமூட்டி
சீண்டி விட்டு கடுப்பேற்றி..
ஆதங்கமாய் பேசுகையில்
கை கொட்டி சிரித்து..

ரசிக்கும் படியாய் வெறுப்பேற்றி..
பிடித்தவற்றை மட்டம் தட்டி அழ வைத்து..
போர்கள எதிரி போல் சண்டையிட்டு..
சேட்டைகள் செய்து பேயாட்டம் போட்டு ..
விலங்குகளின் பெயர்களில் அர்ச்சனை செய்து..
சோகம் மறக்க செய்வாய்..

நாட்களை நட்பாக்கினாய்..
புன்னகையை சொந்தமாக்கினாய்..
எண்ணங்களை தெளிவாக்கினாய்..

மனதின் வலியை புன்னகை
போர்வை கொண்டு மூடி..
இதழ் முழுக்க மந்திர சிரிப்புடன் சுற்றும்..
அன்பான நட்பே..