வீடு

கடற்கரை மணலில்
வீடு வாசல்
கட்டி இடித்தபோது
தெரியாது,
ஒரு நாள்
சொந்த இடம்
சொந்த வீடு
என் வாழ்வின்
லட்சியம் ஆகுமென்று..

காணி கணக்கெல்லாம்
காற்றோடு போனது..
சதுர கணக்கு
பேசும் காலமிது..
அறநூறு சதுரமே
சில லகரங்களை
தாண்டுகையில்..
இன்று சொந்தவீடு
ஆகாயத் தாமரை..

அங்கலாய்ப்புகளுக்கு பின்
ஏதும் வாங்க
வழி இன்றி
சோர்ந்து அமர்கையில்
வானொலியில் ஒலிக்குது
பாரதியாரின்
காணிநிலம் பாடல் - என்
விழியோரம் கண்ணீர்..

No comments:

Post a Comment