புரிந்துக்கொள்ள முயற்சிக்கிறேன்..


தனித்திருக்கையில்..
கனிப்பொறி தேடல்களில்..
உனை தொலைக்க
முயன்று கொண்டிருந்தாய்..

உரையாடினோம்..
பேசியே தீர்த்தோம்..
உன் தனிமைகளையும்
என் சோகங்களையும்..

சந்தோஷம்
நிறைந்து இருந்தது..
என் சண்டைகளிலும்
உன் வீம்புகளிலும்..

இந்நாளில்
அம்மகிழ்ச்சி குறைந்து
சந்தேகம் கூடுவதை
கண்முன் காண்கிறேன்..

எதிர்பார்ப்பில்லாத
உறவு, இல்லாதவொன்று..
அன்பையேனும் எதிர்பார்போம்
உணர்ந்தேன் இன்று..

உன்னுடைய
அலுவலக அலுப்பிலும்..
தேர்வு தொல்லைகளிலும்
மறந்தாயோ என்னை?

இன்று நம்
அலைபேசிகள் பெரும்பாலும்
பரிமாறி கொள்வது
மௌன கதிர்களைதான்..

இந்நாட்களில்..
என் அன்யோன்யம்..
உன் நேர சிக்கலால்
அனாவசியம் ஆனதோ?

சிலசமயம்
நீயும் குரூரம்தான்..
நியாயப் படுத்தாதே
இதையும்.. எதையும்..

என்றேனும்
தனிமையில் அமர்கையில்
பேசாமலே என்குரல்
கேட்கும் உன் செவிகளில்..

இப்போதெல்லாம்
நான் அழுவதில்லை..
ஏற்றுகொள்கிறேன் வாழ்க்கையை..
எதிர்பார்கிறேன் மாற்றங்களை..

மாற்றத்திற்கு..
உன் பிரசன்னமும்
விதிவிலக்கல்ல என்பதை
புரிந்துக்கொள்ள முயற்சிக்கிறேன்..

ஒற்றுமை


குழாயில்
தண்ணீர் பிடிக்க
குடுமிபிடி சண்டை..
அசையாமல்
வேடிக்கை பார்த்தன
காகங்கள்..

இதை மட்டும் நான் எழுதலைங்கோ...

பெறுநர்,

முதல்வர் கலைஞர்.,
தலைமை செயலகம்.,
சென்னை

ஐயா.,

செம்மொழி மாநாடு நடத்துனீங்க..
எங்கும் தமிழ்.,
எதிலும் தமிழ்னு சொன்னீங்க...
ஆனா ஒரு இடத்துல மட்டும்
சுத்தமா தமிழ் இல்லைங்களே..
அங்கிட்டு எல்லாமே இங்கிலீஷ்ல
தாங்க இருக்கு..

நீங்கதான் சீக்கிரம் இதுக்கு
ஒரு நல்ல முடிவா எடுக்கணும்..
அந்த இடம் - நம்ம டாஸ்மாக்

அங்கே இருக்கிற சரக்குக்கு
எல்லாம் தமிழ்ல பேர் வெச்சி
தமிழை வளர்க்கணும்க..

நானே சில பேர் யோசிச்சி
வெச்சிருக்கேன்..
உங்களுக்கு திருப்தி இல்லைன்னா
ஒரு குழு அமைச்சி நல்ல நல்ல பேரா வைங்க..

மிடாஸ் கோல்ட் - தங்க மகன்
நெப்போலியன் - ராஜராஜ சோழன்
கோல்கொண்டா - கங்கைகொண்டான்
வின்டேஜ் - அறுவடை தீர்த்தம்
ஆபீஸ்ர்ஸ் சாய்ஸ் - அலுவலர் தேர்வு
சிக்னேச்சர் - கையெழுத்து
ஓல்டு மாங்க் - மகா முனி
ஜானி வாக்கர் - வெளிநடப்பு
கார்டினல் - பொதுக் குழு
மானிட்டர் - உளவுத் துறை
மேன்சன் ஹவுஸ் - உறுப்பினர் விடுதி
ராயல் சேலஞ்ச் - நாற்பதும் நமதே
ஹோவர்ட்ஸ் 5000 - ஓட்டுக்கு 5000

வாழ்க தமிழ்..
வாழ வைங்க தலைவரே....

விடியல் எங்கே?


இரவு முடிந்திருந்தும்
என் உலகம் இன்னும் இருளில்..
விடியல் தொலைத்துவிட்டேன்
விடியும் நாள் வருமோ?

அன்பாய் பேசிய நீ
இன்று அந்நியன் ஆனது ஏன்?
என் மனதின் அழுகுரலும்
உன் செவியேற மறுப்பது ஏன்?

தொலைந்த என் விடியல்
தேடி ஓடுகிறேன்
கனவிலும் கதறலொலி
செவிடாகி ஊமையானேன்..

எங்கே உன்னை தொலைத்தேன்
தேடி கிடைக்கவில்லை
நீயே வருவாயா?
என் தேடல் முடிப்பாயா?

விந்தை இவ்வாழ்க்கை
சிந்தை கலங்கியதே
இறுதி மூச்செதுவோ?
என் இறுதி மூச்சிதுவோ?

ஒவ்வொரு நிமிடத்திலும்
ஆயிரம் கேள்வி நெஞ்சில்
ஐந்தேனும் அறிவாயோ?
விடைகள் பகர்வாயோ?

பேச தொடங்கவில்லை
பின் பேச்சு முடிவதெங்கே?
வெறுத்தேன் எனை முழுதும்
பித்து மனம் முழுதும்..

உலகம் ஒளி மறந்தால்
உதடுகள் மொழி மறக்கும்
இதை நீ அறிந்திலையோ
என் எண்ணம் புரிந்திலையோ?

மனமே பேசிடுவேன்
கேள்விகள் கேட்டிடுவேன்
பதில் வரும் காத்திருப்பேன்
பதில் வரும் காத்திருப்பேன்..

முடிந்த பயணம்


தற்கொலை செய்து கொண்ட
மனிதனின் பிணம் அகற்ற
ரெயில் வண்டி நின்றது..
எட்டி பார்த்தேன்..

வானம் பார்த்த கையும்,
நொறுங்கி கிடந்த காலும்..
உதைத்தெறிந்த பந்தாக தலையும்
சிதறுண்டு கிடந்தன..

நெஞ்சில் மலையின்
பாரம் உணர்ந்தேன்..
மூச்சு திணறியது
சிரமபட்டு சவாசித்தேன்..

நேற்று வரை எங்கெங்கோ
ஓடி உழைத்த கால்கள்
ஓய்வடைந்து விட்டன..

நேசமாய் பல பேரின்
கை பற்றின கரங்கள்
வானம் பார்த்துவிட்டன..

காதல் தோல்வியோ..
குடும்ப பிரச்சனையோ..
வேலை கிடைக்கவில்லையோ..
கடன் சுமையோ..

விதவிதமாய் யூகம் செய்ய
முயற்சித்தது மனசு..
வேண்டாம்.. யோசிக்க வேண்டாம்..
மனதை அமிழ்த்தியது பாரம்..

நினைவை திசை திருப்ப
தீவிரமாய் முயற்சி செய்தேன்..
ரெயில் வண்டி
நகர ஆரம்பித்தது..

திரும்ப கூடாது என்று
உறுதியெடுத்து கொண்டேன்..
என்றாலும் ஜன்னல் பக்கம்
பார்வையை திருப்பின கண்கள்..

விடைபெற்று கொள்கிறேன்
என்பது போல் கிடந்தன
ரெயில் தண்டவாள ஓரத்தில்
அதே கரங்கள்..

நேசம்


நீயும் நானும்
கலந்து கொண்ட
ஓட்ட பந்தயத்தில்..
நீ ஜெயிக்க வேண்டும்
என நானும்..
நான் ஜெயிக்க வேண்டும்
என நீயும்
வேண்டிகொண்டோம்..
நான் வெற்றி பெற்றதும்
நீ வென்றது போல்
ஆனந்த குதியல் போட்டாய்..
நானோ உன் தோல்வி
பொறுக்காமல்
மனம் நொந்து அழுதேன்..
விநோதமாய் பார்த்தது கூட்டம்..

விளங்காத கவிதை..


கவிதைகள் எழுதியதும்
முதலில் நீ படி எனக் கொடுப்பேன்
ஒன்றும் புரியாமல் வாசித்து
ஆஹா ஓஹோ என்று கை தட்டுவாய்..

பிரசவ வலி வந்தவள்
புருஷனை தேடுவது போல்
கனவிலும் உன்னைத்தான்
தேடிக் கொண்டு இருந்தேன்..

எந்த விஷயத்தையும் முதலில்
நான் சொல்ல துடித்தது
உன்னிடம் தான் என்றேன்
சொல்லாதேதும் இல்லை என்றேன்..

நானும் அப்படி தான்
என்று நீயும் சொன்னாய்..
உன்னிடம் நான் எதையுமே
மறைத்ததில்லை என்றாய்..

எல்லாவற்றையும் சொல்லி செய்த நீ..
ஏன் என்னை பிரியும் போது மட்டும்
திருடன் போல சொல்லாமல்..
கொள்ளாமல் மறைந்து போனாய்..

என் தலையணை பிழிந்துப் பார்
உனக்காக நான் எழிதிய
கண்ணீர் கவிதைகளையாவது
உன்னால் புரிந்து கொள்ள
முடிகிறதா பார்க்கலாம்..

வாழ்க்கை பயணம்..


வாழ்க்கை பயணம்..
நீண்டு நெளிந்த பாதையில்

எத்தனை புன்னகைகள்..
எத்தனை கண்ணீர்த்துளிகள்..
எத்தனை கோவங்கள்..
எத்தனை வெறுமைகள்..

மறந்து போன முகங்கள்..
மறக்க நினைக்கும் முகங்கள்..
நம்மையே கொஞ்சம்
மறக்க செய்யும் முகங்கள்..

எத்தனை உணர்வுகள்..
எத்தனை நெகிழ்ச்சிகள்..
எத்தனை உறவுகள்..
எத்தனை பிரிவுகள்..

வாழ்க்கை பயணம்..
நீண்டு நெளிந்த பாதையில்..

உண்மை தெரியுமா?


கவிதை எழுத சொல்லி..
வாசிக்க கேட்டு ரசித்தாய்..

நான் புரிந்து கொண்டேன்
நீ விரும்புவது என்னை இல்லை
என் கவிதைகளை தான் என்று..

உனக்கு தெரியுமா..

உன்னை நேசிப்பது
என் கவிதைகள் இல்லை
நான் தான் என்பது...??