முடிந்த பயணம்


தற்கொலை செய்து கொண்ட
மனிதனின் பிணம் அகற்ற
ரெயில் வண்டி நின்றது..
எட்டி பார்த்தேன்..

வானம் பார்த்த கையும்,
நொறுங்கி கிடந்த காலும்..
உதைத்தெறிந்த பந்தாக தலையும்
சிதறுண்டு கிடந்தன..

நெஞ்சில் மலையின்
பாரம் உணர்ந்தேன்..
மூச்சு திணறியது
சிரமபட்டு சவாசித்தேன்..

நேற்று வரை எங்கெங்கோ
ஓடி உழைத்த கால்கள்
ஓய்வடைந்து விட்டன..

நேசமாய் பல பேரின்
கை பற்றின கரங்கள்
வானம் பார்த்துவிட்டன..

காதல் தோல்வியோ..
குடும்ப பிரச்சனையோ..
வேலை கிடைக்கவில்லையோ..
கடன் சுமையோ..

விதவிதமாய் யூகம் செய்ய
முயற்சித்தது மனசு..
வேண்டாம்.. யோசிக்க வேண்டாம்..
மனதை அமிழ்த்தியது பாரம்..

நினைவை திசை திருப்ப
தீவிரமாய் முயற்சி செய்தேன்..
ரெயில் வண்டி
நகர ஆரம்பித்தது..

திரும்ப கூடாது என்று
உறுதியெடுத்து கொண்டேன்..
என்றாலும் ஜன்னல் பக்கம்
பார்வையை திருப்பின கண்கள்..

விடைபெற்று கொள்கிறேன்
என்பது போல் கிடந்தன
ரெயில் தண்டவாள ஓரத்தில்
அதே கரங்கள்..

No comments:

Post a Comment